மந்திர ஆசைகள்

நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நட்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
9/21/2010

உழைப்பு


டேய் பஷீர்  , சீக்கிரம் ஒரு கொலை பண்ணிடுவேன் போல .??!!

 ஹரி, நீ புரியும் படி பேசவே மாட்டியா?

மச்சி , இன்னைக்கி தாண்டா அப்பரைசல் சம்பளம் வந்துச்சு . 10% ஹைக்   மட்டும் தான் போட்டு இருக்கானுங்க  .இனிமே இவனுங்களை  கண்ணுல விரலை விட்டு ஆட்டனும் டா .

என்னடா சொல்ற ? 10% ஹைக் ? என்னாலையே தாங்க முடியலே . நீ எப்படிடா  தாங்குற ?

உடைந்து போன மனங்கள் ஒன்றாக சொல்லும் ஒரே வாக்கியம் அங்கும் வந்தது .

கொய்யலா , டேய் பஷீர் , ஒரு குவார்ட்டர் சொல்லுடா  .

ஹரி வேணாம் டா , அது பத்தாது , ஒரு ஹாவ்  வாங்கிட்டு வரேன் . 

பூஜை ஆரம்பமானது . புலம்பல்கள் , சலம்பல்கள் . மேனஜெரின்  தூரத்து சொந்தம் கூட ஹரியின் வாயில் வந்து ,விழுந்து நொந்து போனது . 

ஹரி ,என்னடா சீக்கிரம் கிளம்பிட்ட ?

செத்தான்டா  அந்த மேனஜேர் .அவனுக்கு ஆப்பு ரெடி பண்ணத்தான் சீக்கிரம் போகிறேன் .

ஹாய் ராம்ஜி , எப்படி இருக்கீங்க ?

என்ன ஹரி , ஒரே சந்தோசமாய் இருக்கிற .. ஒ  அப்பரைசல் சந்தோசமா .. எப்ப ட்ரீட்? .
இவன் ஒன்னுக்கு போனால் கூட  ட்ரீட் கேட்கிற  மேனஜேர் என்று மனதுக்குள் திட்டப்படி 
உங்களுக்கு இல்லாமலையா , சீக்கிரம் வச்சிடுறேன் . சீக்கிரமாவே .

ஒரு சின்ன கேப்பிற்கு பிறகு ,
ஹரி , ஒரு ரெகுலர் வொர்க் தான் . நைட் 9 மணிக்கு , ஒரு con- கால் கிளைன்ட் கூட பண்ணிட்டு , code செக் அவுட் பண்ணி , பில்ட் பண்ணி சர்வரை ரெடி பண்ணி வச்சிரு . ஓகே  ?

ராம்ஜி , இனிமே அதை ஸ்டெல்லா பண்ணட்டுமே 

what happened ?

அது என் வேலை கெடையாது . கொஞ்ச நாள் நான் செஞ்சேன் . இனி  ஸ்டெல்லா செய்யட்டுமே .

That is impossible. She has family . You know ?

பேச்சுலர் அப்படின்னா அனாதைன்னு நெத்தியுல எழுதி ஒட்டிருக்கா என்ன  ?

என்ன அப்பரைசல் சரியில்லன்னு கோபமா ?

இல்லை , நான் என் வேலையை மட்டும் பார்ப்பேன்னு சொல்ல வரேன் .

இல்லை , உனக்கு எதோ ப்ரோப்ளம் , வா பேசுவோம் ,

எனக்கு இண்டரஸ்ட் இல்லை .. 


என்னடா ஹரி , இன்னைக்கு எப்படி போச்சு ?

 பஷீர் ,அதை ஏன் கேட்குற . வாயுல ஆப்பை மேனஜெருக்கு வச்சொம்ல . அவன் முகத்துல ஈ ஆடல . இன்னைக்கே கிளைன்ட் ராடு  ஏத்திட்டான் . மூஞ்சு அவனுக்கு செத்துப் போச்சு . இனி ,அவனுக்கு தினமும் தீபாவளி தான் .

அப்படி போடு அருவாளை . உலக மகா கேப்மாரி நீ . உனக்கே அவன் அல்வா கொடுத்தா எப்படி ?.

சரி விடு ,விடு ,. ரொம்ப  நேரமாச்சு . நம்ம அண்ணாச்சி மெஸ்சுக்கு போலாம் .

என்ன அண்ணாச்சி , தட்டு எடுக்கிற பய புதுசா இருக்கிறான் ?

ஒன்னும் இல்ல தம்பி , படிக்க பணம் இல்லை . நைட் வேலை செஞ்சி அந்த பணத்துல படிக்கிறேன்னு சொல்லி வந்தான் .அதான் போன போகட்டும் அப்படின்னு வச்சிகிட்டேன்.

நல்லா வேலை பார்கிறேன் இந்த பயப் புள்ள . என்னடா சொல்ற பஷீர் ?.


எத்தனாவது டா படிக்கிற ?

எட்டாவது படிக்கிறேன் அண்ணா .நாளைக்கு பரிச்சை இருக்குது , சீக்கிரம் போகணும் அண்ணா .

சரி ,சரி சீக்கிரம் சாப்பிடுறோம் .

எல்லாரும் வெளியே வரும் போது,
என்னடா ,திருப்பி  எங்கடா ஓடுற ? பரிச்சை இருக்குன்னு சொன்ன ?

ஒரு தட்டோட பின்னாடி ,லேசா  கொஞ்சம்  அழுக்கு  இருக்குது அண்ணா .

டேய் ,அது பின்னாடி தாண்டா இருக்குது , யாருக்கு தெரிய போகுது ?

அவன் சிரித்துக் கொண்டே, 
எனக்கு தெரியுமே அண்ணே 

-ஒரு சின்ன  கீத உபதேசம் .


2/25/2010

பதின்மம்

என்னையும் தொடர்  பதிவு எழுத சொல்லி மேலும் பாவம் சேர்க்கும் மீன்துள்ளியானுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் . சரி இப்படி சொல்லி தப்பிக்க முடியாது என்று தெரியும் . ஆனால் என்ன எழுதுவது ?  என் பதின்ம வயது அனுபவத்தை  தெரிந்துக் கொள்ள வேண்டியது உலகின் முக்கிய கடமை ஆதலால்  தொடர்கிறேன் .

சினிமாக்களில் வருவானே கதாநாயகன் ,அவன் நமக்கு முக்கியம் இல்லை அவன் கூட சில அல்லகைகள் கடைசி வரை அல்லகைகலாக இருக்குமே அந்த வகை  நான் . ஆனால் நான் கொஞ்சம் ஸ்பெஷல் . ஹீரோவிற்கு  பாடத்தில் சந்தேகம் வந்தால் மட்டுமே உதவும்  குணசித்திர வேஷம் எனக்கு .

பருவ கிளர்ச்சிகளுக்கு துளியும் இடம் தராமல் வாழ்ந்து வந்த வாழும் சரித்திரம் நான் . நம்புக்கப்பா . ஏனென்றால் எனக்கு சொல்லப்பட்ட , படித்துவுடன் கெடைக்கும் வேலைகள் மூன்று .

டாக்டர் , இஞ்சினியர் , பொட்டலம் போடும் மளிகை கடை தொழிலாளி .

எப்போதெல்லாம் 95% இருந்து 85% என்னுடைய மதிப்பெண் குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த மூன்றாவது வேலைத்தான் கிடைக்கும்   என்று தினமும் ,தின நொடியும் அர்ச்சிக்கப்பட்டது .  மளிகை கடையில் வேலை பார்பவர்கள் எல்லாரும் 85% வாங்கியவர்கள் போல என்று நான் வருத்தப்பட்டது உண்டு .

பொதுவாக அந்த வயதில் , பாராட்டுக்காக முழு மனதும் அரிக்கும் . என்ன செய்வது ?, ஆசியர்கள் எல்லாரும் 1,2,3 இடங்களில் வரும் மாணவர்களை தான் பாராட்டுவார்கள் . ஆனால் என்னை போன்ற 7,8 வது இடங்களில் வருபவனை இந்த உலகம் தன் புறங்கையால் தள்ளித்தான் விடும் .

ஏதாவது  கூட படிக்கும் பெண்களுடன் ஒரு வார்த்தை  பேசினால் மனசு அப்படி அடித்துக்கொள்ளும் . ஆண்ட்ரோஜென் ,ஈஸ்ட்ரோஜென்  கெமிஸ்ட்ரி என்று அமரர் சுஜாதா சொல்லியவாறு எல்லாம் தாறுமாறாக வேலை செய்தது .

என்ன பிரயோஜனம் , ம்கும் ..முக்கும் . விடுங்க பாஸ் .

இந்த பொண்ணுகளே இப்படித்தான் என்று  புலம்பிவிட்டு  நாட்டமையாக வலம் வந்து கொண்டு இருந்தேன் .

திட்டுகள் மட்டுமே பரிசாக கிடைத்த ஒரு நாளில் , பள்ளி ஆண்டு   விழா . பக்கத்தில் இருக்கும் ஹீரோவிடம் நான் சொன்னேன் ,நானும் +2 வில் பரிசு வாங்குவேன் என்று .

போடா , போ , எந்த படத்துல  இந்த காமெடி , சொல்லவே வில்லை என்று சிரிப்பு . உள்ளுக்குள் நொறுங்கித்தான் போனேன் .

தொடையை தட்டி பேச நான் ஒன்றும் ஹீரோ இல்லையே . கண்ணீரை கண்ணுக்குளே சிறை வைத்தேன் . அது வெளியேறியது +2 வில் நான் கலெக்டரிடம்    தங்க மெடல் வாங்கும் போது தான் . பரிசு என்ற கானல் நீர் முதன் முதலில் என் கையில் விழுந்தது .

பள்ளி கூடத்து  நட்பு என்பது பருவ பெண்ணை பார்ப்பது மாதிரி . எப்போதும் மகிழ்ச்சித்தான் , சிரிப்புதான் . கிளர்ச்சித்தான் . ஆனால் அது பின்னர் நிலைக்க முடியாமல் போவதற்கும் அதுவே காரணமாகிறது . இப்போதும் எங்கு பார்த்தாலும் பேசிக் கொள்கிறோம் ,ஆனால் மனதில் ஒரு மெல்லிய திரையோடு .


கல்லுரி கால வாழ்க்கை குணசித்திர வேசத்தில் இருந்து இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக  மாற்றியது .ஆனால் இன்னும் ஹீரோவாக முடியவில்லை . அரசியல் , அரசியல் அதை நான் கற்றுக்கொண்டது கல்லூரியில் தான் .

பொதுவாக கல்லூரியில் இரண்டு குருப்புத்தான் . ஒன்னு கடலை போடும் , இன்னொன்று கடலை போடாது .என்னென்றால் எங்களுக்கு தெரியாது , முடியாது .

நான் இரண்டாவது குருப் . ஒரு சின்ன ரவுடியாக வலம் வரும் ஆசை கொஞ்சம் நடந்தேறியது . உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட வார்த்தைகளையும்  ஒரு சேர நண்பர்களுக்குள் புன்னகையுடன் திட்டிக்கொள்வோம் . அவனை(நண்பனை ) நான் கேவலமா திட்டுவேன் , அவன் என்னை ரொம்ப கேவலமா திட்டுவான் . இதை ஒரு விளையாட்டாகவே நாங்க செய்வோம் . 

சோதனை காலம் என்றால் அது Placement காலம் தான் . என்னுடைய ஆங்கில புலமையை பார்த்து , அருவி என கொட்டும் ஆங்கில அறிவை பார்த்து மிரண்டு எனக்கு ஒரு நிறுவனமும் வேலை தரவில்லை . இந்த தமிழ் மீடியம் படித்து வருத்தப்பட்டது அப்போதுதான் . மெதுவாக ,என் தன்னம்பிக்கை குறைய தொடங்கியது . முதல் 3 நிறுவனங்களில் நண்பர்கள் எல்லாருக்கும் வேலை கிடைத்துவிட    நான் மட்டும் தனி மரமானேன் .  வாழ்க்கையை பார்த்து பயம் பழக தொடங்கினேன் . தொடர் முயற்சிகள் என்னை அயர்ச்சி அடைய மட்டுமே செய்தன . தீண்டாமையை எனக்குள்ளே நானே உருவாக்கி கொண்டேன் . ஒரு நாள் , அந்த நாள் மீண்டும் முயற்சி செய்து தோல்வியை சந்தித்தேன் .


அறையில் தனியே ,என் தலையணை மெதுவாக கண்ணீரால் நனைந்து கொண்டு இருந்த்தது . வாய் விட்டு அழ முடிய வில்லை  .

நண்பன் ஒருவன் வந்தான் . கண்ணை    மூடிய நிலையில் நான் .

"டேய் , நீ அழ வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் . நல்ல அழு . அழு .ஆனால் இது தான் நீ கடைசியா அழுவது என்று முடிவெடுத்து விட்டு அழு . "

கண்ணை திறந்து பார்த்தேன் . எதுவும் பேச வில்லை . அது தான் நான் கடைசியாக் அழுதது . அடுத்த சில நாட்களில் ,என் கைகளில் வேலை .

இன்றும் சோதனை வரும் போது ,அந்த வார்த்தைகளை நினைத்துக் கொள்வேன் .கல்லுரி கால நட்பு எனக்கு ஒரு வரபிரசாதம் ."மாப்ள , 20,000 அக்கௌண்டுக்கு  அனுப்பிடு " , என்று சொன்னால் அடுத்த 5 வது நிமிடம் பணம் வந்து விடும் . இப்படி ஒரு நம்பிக்கையை என்னை பற்றி மற்றவர்களிடம் ஏற்படுத்தியது கல்லுரி . ஆரம்பிக்க தெரிந்த எனக்கு முடிக்க தெரியவில்லை . முடிவில்லா வானம் போல் ,நட்பும் தொடரட்டும் .

என்னை வம்புக்கு இழுத்த மாதிரி , நானும் இரண்டு பேரை கூவிக் கொள்கிறேன் .
புவன் (சுட்டப்பழம் )
குந்தவை
மேற்ப்படி பெரிய எழுத்தாளர்கள் ,நான் சொன்ன படி "பதின்மம் " பற்றி தொடர் பதிவு எழுத வில்லை என்றால் , கடுமையான் பின் விளைவுகள் வரும் என்று இப்போதே கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் .


1/18/2010

பேசா மொழி


நான் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு செல்வதற்கு , பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன் .
 தேவதைகள் பலர் , அவர்களின் தேவர்களோடு காட்சி கொடுத்ததால் மனம் வெதும்பி சற்று வெறித்த பார்வையுடன் செல் பேசியை நோண்டி கொண்டு இருந்தேன் .

அப்போது ஒரு குட்டி ,அழகிய   பிசாசு வந்து என்னை முறைத்தது . அந்த பாப்பாவுக்கு 2 வயதுக்குள்தான் இருக்க வேண்டும் . ரோஸ் நிறத்தில் ஒரு குல்லா. வெளிர் மஞ்சள் நிறத்தில் டாப்ஸ் .

 நடக்க கூட தெரியவில்லை ,ஆனால் "இது என் ஏரியா"   என்ற பார்வை அதன் கண்களில்  .
எனக்கு அந்த பாப்பாவை கொஞ்சம் வேண்டும் ஒரே ஆசை . எங்க , நமக்கு ஆசைப்பட்டது எல்லாம் நடந்து இருக்கு .

என்னை , மேலும்  கீழும் ஒரு பார்வை .
அப்புறம் கிட்ட கூட வரவில்லை .

ரொம்ப வேகமாக ஓடுவதும் , விளையாடுவதும் ஒரே கொண்டாட்டம் தான் .

கொஞ்ச நேரத்தில் , இன்னொரு  குட்டி பிசாசு வருகை தந்தது .

அக்னி நட்சத்திரம் கார்த்திக் , பிரபு மாதிரி ஒரு முறைப்பு ரெண்டு பேரிடம் .

ஒரு பாப்பா வேகமாக ஓடியது . அதை விட வேகமாக இன்னொன்று ஓடியது.
திடிரென , ரெண்டும் கொஞ்சம் பக்கத்தில் வந்து , அவரவர் சட்டையை பிடித்து கண்காளாலே பேசிக்கொண்டனர் .

என்னடா , இப்படி ஒரு திடீர் திருப்பம் என்று நான் நினைத்துக் கொண்டு இருக்கும் பொது ,
ஒரு பாப்பா , வேகமாக ஓடி, ஒரு இடத்தில் நின்று  இன்னொன்றை பார்த்து சிரிக்கும் .
இன்னொரு பாப்பா , அதை துரத்தி சென்று அதன் அருகில் நின்று ,அதனை தொட்டு பயங்கரமாக சிரிக்கும் .

ரெண்டுக்கும் கொஞ்சம் கூட பேசத்தெரியாது , ஆனால் ரொம்ப நேரமாக சிரிப்பதும் , விளையாடுவதும் ஒரே அக்கப் போர் .

திடிரென ஒரு வில்லன் என்ட்ரி அங்கே .
வில்லனுக்கு உயிர் இல்லை . ஆம் , ஒரு தண்ணீர் பாட்டில் தான் அங்கு வில்லன் .

ஒரு பாப்பா அந்த பாட்டிலை எடுத்தது . இன்னொரு பாப்பா , அதைக் கேட்டது .
ஒப்பந்தம் தோல்வியில் முடிய , இரண்டுக்கும் ஒரே போர் .

சட்டையை இழுப்பதும் , பாட்டிலை இழுப்பதும் ஒரே ரத்தக் கலரி .
அதன் பிஞ்சுக் கால்கள் ,ஓடி ஓடி  களைப்படைந்து  போய் இருப்பதால் ஒரே இடத்திலே நின்று மூன்றாம் உலகப் போர் நடந்து கொண்டு இருந்தது .

ஒரு பாப்பாவுக்கு வெற்றி , இன்னொன்றுக்கு தோல்வி .
நட்பினில் ஒரு விரிசல் .
சிறிது நேரத்திற்கு பின் , ரெண்டு குட்டிகளும் தனி தனியே   நின்று கொண்டு இருந்ததன .

ஒன்று அந்த பாட்டிலுடனும், இன்னொன்று அங்கே , இங்கே ஓடியும் மீண்டும் விளையாட துவங்கின .

திடிரென அந்த தோல்வியுற்ற பாப்பா கீழே விழ , அதன் அப்பா , தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார் . வலியால் அந்த குட்டி வாண்டு அழ ஆரம்பித்தது .

இப்பத்தான் நீங்க , இங்க கவனிக்கணும் .

இன்னொரு பாப்பா , அந்த பாப்பாவை  கிட்ட போய் பார்க்குது .
அங்கே அழுகை நின்றது .

சில பார்வைகளுக்கு பிறகு , அழுமூஞ்சி பாப்பா , இன்னொரு பாப்பாவை துரத்த ஆரம்பித்தது .மீண்டும் சிரிப்பு சத்தம் .

மீண்டும் அநாதை  ஆனது அந்த தண்ணீர் பாட்டில் .

ஏனோ தெரியவில்லை , என் கைகள் தேடத் துவங்கி இருந்தன ஒரு நண்பனின் செல் நம்பரை .பேசாதிருக்கும் என் நண்பனை பேச வைக்க போகிறேன் .

சில சமயம் , எந்த மொழிகளுக்கும் தேவை இருப்பதில்லை .