மந்திர ஆசைகள்

7/16/2009

கற்பின் களங்கம்

அழகில் நான் சினேகாவுக்கு போட்டி .இதை நான் சொல்ல வில்லை .என் தோழிகள் எல்லாரும் சொல்லுவார்கள்

அப்புறம், இந்த ஆம்புள பசங்க ரொம்ப மோசம் .
அப்பாடி!! என்ன பார்வை பாக்குறாங்க ?

எனக்கே கொஞ்சம் வெட்கமாக இருக்கு . ஹரி என்னை பெண் கேட்டு வரும் வரை , என் வீட்டு முன்னால் எப்போதும் பசங்க இருப்பாங்க .

காதலை நான் சினிமாவில் மட்டுமே பார்த்து வந்து இருக்கிறேன் .
ஆனால் இந்த ஹரி , தினமும் I LOVE U என்று 100 முறை சொல்லி விடுகிறான் . இதுவும் எனக்கு பிடித்து இருக்கிறது .பெண்ணாக பிறந்ததால் எவ்வளோ சந்தோசம் .

இந்த உலகம் பெண்களை சுற்றிதான் உள்ளது என்பது உண்மை தான் . வில்லன்களே இல்லாத சினிமாதான் என் வாழ்கை .

கொஞ்சி குலாவும் கணவன் ,திகட்டாத மாமியாரின் அன்பு இப்படி சொல்லி கிட்டே போகலாம் .இப்ப நினைத்தாலும் உடம்பு எல்லாம் கூசிகிறது அந்த முதல் இரவை நினைக்கையில் .

புது ஆண் , தனி இரவு ,படுக்கை அலங்காரங்கள் . எதுவுமே மறக்க முடியவில்லை .

போன மாதம் வரை நான் , நான் மட்டுமே . இன்று நான், இன்னொருவரின் மனைவி . காலத்தின் கோலங்கள் எவ்வளவு சுகமானவை .
இரண்டு மாதங்கள் என்னை தின்ன துவங்கின .

எனக்கான உலகம் என்னை வெளியே துரத்தியது ஒரு தொலைப்பேசி அழைப்பின் மூலம் . செய்தி சிறியதுதான் . ஹரிக்கு எமனாக வந்தது ஒரு நாய்

. "சென்னையில் நாயை காப்பாற்ற எண்ணி விபத்தில் இறந்த வாலிபர் " என்று மாலை முரசு முதல் எல்லா பத்திரிக்கைகளிலும் என்னவர் பெயர் .
யாருக்கும் தெரிய போவதில்லை பின்னால் இருக்கும் என் எதிர்காலம் .

கூட்டம் கூடி எனக்கு பட்டம் கொடுக்க துவங்கினர்.

மொட்டச்சி ,
ரெண்டு மாசத்துல புருசனையே முளுங்கியவ .
என்னா ,மினுக்கு மினுக்கினா....

அவர் அவர்களுக்கு பிடித்தமாதிரி கெட்ட தமிழில் 1000 வார்த்தைகள் .அனைத்தும் என்னை வந்து தீண்டி போயின .
விதவை என்று ஒருவரும் திட்ட வில்லை இந்த 21 ஆம் நூற்றாண்டில் .

பிறந்த இடத்தில் மீண்டும் குடி புகுந்தேன் .
தேவதை என்று என்னை கொஞ்சிய உலகம் இன்று , வசை பாட தயாராக இருந்தது . ஜாதகம் , தோஷம் எல்லாம் என்னை தேடி வந்து அடைக்கலம் கொடுத்தன .

இரவுகள் தனிமையாயின .

சில சுகங்கள் எப்போதும் கிடைக்க வேண்டும் .இல்லையெனில் எப்போதும் கிடைக்க கூடாது .

கொடுத்து பழகியப்பின் என்னையே எரிக்க துவங்குகிறது இந்த பாவி உடல் . இளமையின் தனிமையை விட விதவையின் தனிமை கொடுமை .

நான் நானாக இருக்கும் சில சமயங்களில் , பக்கத்து வீட்டு "அம்மு " குட்டியுடன் விளையாடுவேன் .

குழந்தையாகவே இருந்திருக்கலாம் , இறந்தும் இருக்கலாம் .

அம்மு குட்டியின் அப்பாவை நான் பார்க்கவே விரும்பவதில்லை . எது வேண்டும் என்பதை அவனின் பார்வை உணர்த்திவிடும் .

முன்பு ஆண்கள் என்னை பார்த்த பார்வைகளை பாராட்டுகள் என்று எண்ணிய மனது , இப்போது பார்வையின் விஷம் அறிந்து அடங்குகிறது .

அன்றும் மற்ற நாட்களை போலத்தான் வந்தது . என் தனிமையை அழிக்கும் அந்த குட்டி சாமியை பார்க்க போனேன் சற்றே பயத்துடன் .

அவன் வீடு என்ற தைரியம் , யாரும் இல்லை என்ற துணிச்சல் ,அடைய வேண்டும் என்ற வேட்கை எல்லாம் சேர்த்து தெரிந்தது அவன் என்னை இருக்க கட்டி பிடித்ததில் .  
என்ன துள்ளுற ? இதை பாரு ,
தனியா எவ்வளவு நாள் இருப்ப ? கொஞ்சம் அமைதியாய் இரு டி . ஏய் , ஏய் ..

நெருப்பில் இடப்பட்ட புழுவாய் அவனிடம் இருந்து விலகினேன் .உடம்பின் நடுக்கம் இன்னும் குறையவில்லை . கற்பு என்பது என்ன ? கணவன் இருந்தால்தானா ?
விதவைக்கும் உண்டு கற்பு .
படி தாண்டாள் பத்தினி என்பது எவ்வளவு உண்மையோ
அதே போல் தான், பதி இழந்தாலும் பத்தினி பத்தினி தான் .

விபச்சாரியிடம் கூட காசு கொடுத்தால் தானே சுகம் , என்னிடம் மட்டும் என் இந்த துணிச்சல் ?

விபச்சாரியை விட நான் என்ன கேவலமானவளா ?
தொட்டால் மாறுவேன் என்று தானே ..
தொட்டால் மடிவேனே அன்றி மாறமாட்டேன் .

பத்து மாதம் பெற்ற தாயிடம் கதறி அழுதேன் .
அவளோ , மானம் , மரியாதை , கவுரவம் என்றாள் .

அவன் வீட்டுக்கு போனது என் தவறாம் .

பெண்ணுக்கு பெண்ணே எதிரி .

கடவுளிடம் கூட, முறை இட பிடிக்கவில்லை .

தனிமையில் இருந்த என் காதில் விழுந்தது என் அப்பாவின் சொற்கள் .  

"எல்லாம் சாமி குத்தம் தான் . அதான் , 10 பவுனுல ஒரு தாலி செஞ்சு அம்மனுக்கு போட போறேன் . அப்புறம் ஒரு பட்டு புடவை எடுத்து புற்று அம்மனுக்கு போடணும் .. "

கல்லுக்கு கூட தாலி , புடவை .. தேடி கொண்டு இருக்கிறேன் "விதவையாய்" உள்ள ஒரு தெய்வத்தை எனக்கு துணையாக .


7/16/2009

என் தொப்பையின் அளவு 40

இது கொஞ்சம் சீரியஸ் பதிவு ..
 அதனால காமெடி வேண்டுபவர்கள் வேறு பக்கம் போய் விடவும் .
 அட என்ன சொன்னாலும் நம்பாம மேல படிக்கிறீங்க . உங்க தலையெழுத்தை நான் என்ன மாற்றி விடவா முடியும் ?

 ரொம்ப நாளா உடம்பை , மன்னிக்கவும் தொப்பையை குறைக்க என்ன பண்ணலாம் என்று யோசித்து கொண்டிருந்தேன் ..
 யோகா என்றால் 5 மணிக்கு எழுந்திரி என்று பயம் காட்டினார்கள் . ஜாக்கிங் என்ற பெயரில் ஓடு , ஓடு விரட்டினார்கள் .. மூட்டு வலி வந்துதான் மிச்சம் ..

 30,32,34,36 என்று வேகமாக வளரும் என் செல்லத் தொப்பையை குறைக்க , ஏதாவது ஒரு விளையாட்டில் ஈடுபடலாம் என்று ஒரு மனதாக பொதுக்குழு கூடி முடிவெடுத்தேன் ..

  சரி , ரொம்ப சீப் விளையாட்டு பேட் மிட்டன் . அதையே விளையாட எண்ணி , நானும் , என் நண்பனும் புதுசா எல்லாம் வாங்கி விளையாட ஆரம்பித்தோம் ..

 ரெண்டு நாள் தான் .. ரெண்டே நாள் தான் . எவன் கண் பட்டுதோ ? ரெண்டு நாள் கூட விளையாட முடிய வில்லை . எதிர்த்த வீட்டில் ஒரு ஆண்டி (நம்மளை விட சின்ன வயசு தான் .. ஆனால் கல்யாணம் ஆயிடுச்சே ..) ஒரு கூட்டம் சேர்த்து எங்கள் இடத்தை ஆக்கிரமித்து விளையாட ஆரம்பித்தார்கள் ..

 எங்களையும் ஆட்டத்துக்கு சேர்த்துக் கொள்வார்கள் என்ற நல்ல (என்னது ?) நினைப்பில் அவர்கள் விளையாடுவதை பார்க்க துவங்கினேன் ..

 இது ஒரு குத்தாமாம் ..

 எத்தனை வார்னிங், திட்டுக்கள் . எல்லாம் வீட்டு ஓனர் என்ற வில்லன்தான் ..

 திடிரென ஒரு பெண்கள் P.G(Paying Guest) முளைக்க துவங்கியது எங்கள் தெருவில் . தேவைதைகளின் தேவதையை தேடி பல தேவதாஸ்கள் எப்போதும் உலவ துவங்கினர்.

 தொப்பையை குறைக்க வில்லை என்றால் இப்போது பெண் கிடைப்பது அரிது என்று சொன்ன பெரியவர்களின் முது மொழிக்கேற்ப , மீண்டும் விளையாட துவங்கினேன் ..

 இப்ப ரெண்டு நாள் இல்லை ..
ரெண்டு மணி நேரம் தான் ஆச்சு ..
 திடிரென சுப்ரமணியம் ஜெய் மாதிரி ஒரு பத்து பேர் வந்தாங்க ..
 கவிதா என் ஆளு, சபிதா அவன் ஆளு. சுஷ்மா என் பிகரு .. அப்படி , இப்படி .என ஒரே கூச்சல் .

 கடைசியில இனிமே இங்க வந்து பிலிம் காட்டின மவனே , டங்கு வாறு அறுந்து விடும் என்று பாசமாக சொல்லி விட்டு போனார்கள் .

 

என்ன கொடுமை சார் இது ?
 நான் ஒரு நல்ல காமெடியன் கூட இல்லை ..

என்னை ஒரு M.N நம்பியார் ,P.S வீராப்பா ரேஞ்சுக்கு பேசி கிட்டு இருகாங்க ..

அந்த அளவுக்கு நான் வொர்த் இல்லைடா என்று சொன்னாலும் எவனும் ஒத்துக்க் கொள்ள மாட்டேன்குறாங்க ..

 அவுங்க டாவ் அடிக்கிற பிகர்கள் எல்லாம் இவனுங்களுக்கு டாட்டா காட்டிட்டு போக போகிறார்கள் இந்த பத்தன் (அது என்ன பத்தினி சாபம் ) சாபம் கூட பலிக்கும் என்பதை மறந்து விட்டார்கள் ..

 இப்ப என் தொப்பையின் அளவு 40 ...

 ம்கும் .. குறையாது ..குறையாது ..

 வேற என்ன விளையாட்டு விளைடாலாம் ?


7/08/2009

விகடனில் நான் ..

நான் : நம்ப முடியவில்லை ..

 மனசாட்சி : அட நம்பித்தான் ஆகனும் ..

 நான் : நான் எழுதியது எல்லாம் ????

 மனசாட்சி : இனி நீகூட ஒரு எழுத்தாளன் ..

 நான் : அப்படி எல்லாம் சொல்லாதே ஒரே வெட்கமா இருக்கு ..

 மனசாட்சி : அட நாயே ..சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னதற்க்கே இப்படியா ...

 யூது புல் விகடனில் என் படைப்பு வெளியானதே இந்த போராட்டத்திற்கு காரணம் ..

 நீங்களும் அதை படிக்க இங்கே செல்லவும்


7/04/2009

அது என்ன ?

வீட்டின் முன் இருக்கும் அந்த பார்க்கில் ஹரியும் , அவன் தந்தையும் அருகருகே அமர்ந்து இருந்தார்கள் .

 நவ நாகரீக வேகத்தில் தன்னை தொலைத்து கொண்டு இருக்கும் ஹரி , அவன் அப்பா ராஜாவை எதோ கடனே என்று கூட்டி கொண்டு வந்து இருந்தான் .

  "ச்சே , ச்சே இது ஒரு வேலையா போட்சு ..சனி , ஞாயிறு இது ஒன்னு வேற ..கூட்டிட்டு போ, கூட்டிட்டு போ..அம்மாவோட புலம்பல் ..கொஞ்சம் கூட ரெஸ்ட் இல்ல " என்று தனக்கு தானே புலம்புவதாக எண்ணி வாய் விட்டு குமறிக் கொண்டிருந்தான் ஹரி .

 காதில் விழுந்தாலும் , அமைதியாக கேட்டு கொண்டு இருந்தார் அவன் அப்பா .. திட்டினாலும், தன் மகன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தார் .

 எதோ ஒரு நடிகனின் படத்துக்காக 3 ,4 மணி நேரம் காத்து கிடக்கும் நம்மை போன்ற ஹரி, இந்த வார குமுதத்தில் புதைந்து கொண்டிருந்தான் ... 10 ருபாய் குமுதம் , தன் மகனை தன்னிடம் இருந்து பிரிப்பதை அப்பாவால் தாங்கி கொள்ள முடியவில்லை .

 வாரம் முழுவதும் காத்துக் கொண்டிருக்கும் அவருக்கு இந்த சில மணி நேரங்கள் தான் வாழ்கையின் பிடிமானங்கள் . மணித்துளிகள் நொடி மேகங்களாக கரைந்து , மறைந்து கொண்டிருந்தது ..

 அப்போது ஒரு சிட்டுக்குருவி பறந்து வந்து அருகே உள்ள மரகிளையில் வந்து சம்மனமிட்டது .. ஹரியின் தந்தையின் முகம் சற்றே மலர்ந்தது ..

 உடனே ஹரியிடம்,

 அது என்ன ?

நயன்தாராவின் காதலை படிக்க இடையுறாக இருக்கும் தன் தந்தையை கடுப்புடன் நோக்கினான் ஹரி ..
  என்ன ? என்றான் எரிச்சலுடன் ..

 அங்க பாரேன் என்றார் அவன் தந்தை .

  அது சிட்டுக் குருவி ..ம்கும் ..

சில நிம்டங்களுக்கு பிறகு ,அவன் தந்தை திரும்பவும் அது என்ன ?
  

அப்பா ,  உங்களோட ஒரே ரோதனையாய் போச்சு. கொஞ்ச நேரம் அமைதியாக இருக்க முடியாதா ?

சற்று நிறுத்தி ,,, திரும்பி பார்த்து

அதே சிட்டுக் குருவிதான் ...என்றான் கோபத்துடன் .

அடுத்த சில நிமிடங்களுக்கு பிறகு , அதே கேள்வி அவன் தந்தையிடம் இருந்து .. பொறுத்திருந்த அத்தனை கோபங்களும் மொத்தமாக வெடிக்க ,
ஹரி நிதானம் தவறினான் .
 
ஏன் என்னோட உயிரை இப்படி வாங்குறீங்க ... வாரம் , வாரம் உங்களோட இதே இழவா போச்சு .
 இனிமே அங்க கூட்டிட்டு போ , இங்க கூட்டிட்டு போ அப்படின்னு சொன்னீங்க ...அப்புறம் நான் நானாகவே இருக்க மாட்டேன் .
இம்சை பன்றதுக்குனே எனக்கு அப்பாவா வந்து வாச்சி இருக்கீங்க .. ச்சே ..
பொருமி தள்ளினான் ஹரி ..

முதுமை வலியை விட பிள்ளையின் வார்த்தைகளால் ரொம்பவே வலியை உணர்ந்தார் ஹரியின் அப்பா . வீட்டை நோக்கி , நடக்க துவங்கினார் . தன் நிம்மதி பறி போய்விட்டதாக , புலம்பினான் ஹரி .

அந்த சிட்டுக்குருவியை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் . சில நிமிடங்களில் , அவன் தந்தை மீண்டும் அவன் அருகே வந்து அமர்ந்தார் .
ஆனால் அவர் கையில் , அவரின் 1988 ஆம் வருட டைரி .
அதனை ஹரியிடம் கொடுத்து , அதன் ஒரு பக்கத்தை படிக்க சொன்னார் .
ஒன்னும் புரியவில்லை ஹரிக்கு .
சற்றே சலிப்புடன் , படிக்க துவங்கினான் ..  

கொஞ்சம் சத்தமாக என்றார் அவன் அப்பா .


" ஜூலை 10, நானும் என் பையன் ஹரியும் பார்க்கில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறோம் ..
இவன்தான் என் சொத்து என்று ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ந்து கொண்டு இருக்கிறேன் . இதோ என்னை ஓட வைக்கிறான் , சிரிக்க வைக்கிறான் ..  

என் வாழ்கையின் ஜீவ நாடியாக அவன் மாறி இருக்கிறான் ..
இல்லை . இல்லை என்னை மாற்றி இருக்கிறான் .  
எங்கள் இருவரின் முன் ஒரு சிட்டுக்குருவி வந்து அமர்ந்தது .. அவன் என்னிடம் கேட்டான். அது என்ன ?"

படிப்பதை நிறுத்தி விட்டு தன் தந்தையின் முகத்தை பார்த்தான் . அவர் கண்களில் சிறு வெள்ளம் . மேலும் படிக்க சொன்னார் அவனை .
மீண்டும் படிக்க துவங்கினான் .. ஆனால் இம்முறை குரலில் உறுதி குலைந்து இருந்தது .. தடுமாற்றத்துடன் ஆரம்பித்தான் .

"நான் சொன்னேன் , அது சிட்டுகுருவி என்று . திரும்பவும் கேட்டான் அது என்ன வென்று . பதில் சொன்னேன் அது சிட்டுகுருவி என்று .. தொடர்ந்து 28 தடவை கேட்டான் அது என்ன என்று .. நானும் நிறுத்தவில்லை பதில் சொல்வதை ..

  ஒவ்வொரு தடவை பதில் சொல்லும் போதும் , அவன் குழந்தை தனத்தை மெச்சி முத்தம் கொடுத்தேன் .. அத்தனை தடவையும் பதில் சொல்லியும் எனக்கு சலிப்பு ஏற்பட வில்லை .. ஏனெனில் அவன் என் செல்ல மகன் ..  
பதில் மறந்து என்னிடம் திரும்பி , திரும்பி கேட்டானா ? 
இல்லை என் முத்ததிற்காக கேட்டானா ..?
தெரியவில்லை .
தெரிந்துக்கொள்ளவும் விருப்பம் இல்லை .."

டைரியை மூடினான் ஹரி .. குமுதம் மண்ணை முத்தமிட்டது ..

இந்த முறை , இவன் கண்களில் கண்ணீர் ..

தன் அப்பாவை , தன் தோளோடு கட்டி பிடித்துக் கொண்டான் ..  

"அப்பா ..அப்பா ..."
வேற எதுவும் பேச வில்லை ஹரி ..  

இப்போது அவர்கள் அருகருகே இருந்தார்கள் மனதளவில் ..

டிஸ்கி : இது ஒரு ஆங்கில குறும் படத்தின் தாக்கத்தினால் , நான் எழுதியது ..நன்றிகள் பல அந்த படத்திற்கு ..