மந்திர ஆசைகள்

1/27/2010

திரும்பி பாருங்க :குடியரசு தின வாழ்த்துக்கள்

கொஞ்சம் லேட்டுதான் .. ஆனாலும் நீங்க ரசிக்கலாம் ..


 
 

 

 
 
 
 

 
 
 
 1/22/2010

கள்ளக் காதல்

ஏன் டீ , அங்க எவனை பார்த்து பல்ல காண்பிச்சு மயக்குற ? புருசனின் குரல் காதில் விழுந்தாலும் மெதுவாகவே அவள் திரும்பினாள்.
பழக்கப்பட்ட வார்த்தைகள் அவளிடம் பலம் இழந்து போயின.

விஷம் தெளித்த வார்த்தைகளை தாங்கி கொண்டு வெளியில் இருந்து வீட்டினுள் அடைப்பட்டாள்.

என்னடி , நான் இவ்வளவு கத்தியும் , துளியும் அசையாமல் எருமை மாடு மாதிரி நிக்குற ?

வழக்கம் போல அவள் கண்களில் கண்ணீர் .

என்னடி பத்தினி வே ஷம்  போடுற , முதல்  ராத்திரில்லே என்க்கிட்டையே நீ ஒருத்தனை லவ் பண்ணினேன்னு சொன்னவள் தானே ..!

கணவனிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்ததற்கு தினம் தினம் பரிசு மழை அவளுக்கு .


டிரைவர் பாண்டியன் அப்போது உள்ளே வந்தார் . ஐம்பது வயதை கடந்த நிலையால் நிதானம் சற்று அதிகம் அவருக்கு . ஆனால் அவராலே இவள் படும் துன்பங்களை தாங்க முடியாது .

என்னய்யா , இவ்வளவு லேட்டா வருகிறாய் ? சரி , சரி சீக்கிரம் வண்டியை கிளப்பு , போகலாம் .

அவன் வெளியேறினான் . அவன் இட்ட வடுக்கள் மட்டும் இவளுடன் .
மாலை , வில்லனுடன் அவன் நண்பனும்  வந்தான் .

டேய் ரகு  , என்னோட மனைவியை நீ பார்த்தது இல்லைல. இரு நான் கூப்பிடுறேன் .
அவன் கூப்பிடுவதற்க்குள் , அவளே அங்கு பயந்து நிற்க

உடனே ரகு , தேவதை மாதிரி உனக்கு மனைவிடா , நீ ரொம்ப  கொடுத்து வைததவன்டா.

நன்றி . சரி என்ன குடிக்க வேணும் உனக்கு ?

நான் வேண்டுமென்றால் காப்பி கொண்டு வரட்டா  என்று அவள் அப்பாவியாக கேட்க .
சிரித்து கொண்டே சரி என்றான் ரகு .

பின் அவள் கணவனிடம் , விருந்தாளிக்கு என்ன பிடிக்கும் என்று உன் மனைவிக்கு நன்றாக தெரிகிறது என்று பாராட்டினான் .
ரகு போன பிறகு ,
வீட்டினுள் ஒரு அணுகுண்டு வெடித்தது .

ஏண்டி , அவனை உனக்கு முன்னாடியே  தெரியுமா ? நான் கூப்பிடுவதற்க்குள் நீ ஏன் வந்தாய் ?
அவனுக்கு காப்பி தான் பிடிக்கும் என உனக்கு எப்படி தெரியும் ?
என்னடி இவனும் முன்னாள் காதலனா ?
இன்னும் எத்தனை பேருடி?

சொற்கள் எல்லாம் அவளை சுட்டு தின்றன .

அவன் போன பிறகு , இதை எல்லாம் கேட்டு கொண்டு இருந்த டிரைவர் பாண்டியன்,
தாயி , எப்படி தாயி ,இந்த பயலோட இருக்க , பேசாம உங்க வீட்டுக்கு  போய்டு தாயி .

நான் எங்கப்பா ,போவேன் . வீட்டுல இருந்தப்ப , காதலை ஒரு கொலை குற்றம் போல பார்த்து திட்டு , அடி , உதை வாங்கினேன் . இப்ப இவர்கிட்ட வாங்குறேன் .
நான் எதுக்குப்பா வாழனும் ? காதலிச்சது ஒரு தப்பா ?

நீ என்னோட மகளா இருந்தா , எப்பவோ உன்னை என் கூட அழைத்துக் கொண்டு போயி இருப்பேன் . இந்த பய ,உன்னை கொஞ்சம் , கொஞ்சமா கொன்னுடுவானே

விதி அதுவாக இருந்தால் நான் என்ன செய்ய முடியும் ?

கண்களில் கண்ணீர் இல்லை . கண்ணீரும் வற்றிப் போயி பல நாட்கள் ஆகிறது .


அடுத்த நாள் , அவன் போன பிறகு ரகு வந்தான் .

எங்கங்க அவன் இல்லையா ?

இல்லை , இப்பத்தான் அவர் வெளியே போனார் ..

அச்சோ . சரி நான் அவனை மறுபடியும் வரை சொல்கிறேன் . நீங்க எனக்கு அன்னைக்கு போட்ட காப்பி மாதிரி போட்டு எனக்கு எடுத்துக் கிட்டு வாங்க . ப்ளீஸ் .

உடம்பெல்லாம் கொஞ்சம் நடுங்கித்தான் போனால் அவள் . என்ன நடக்க போகிறதோ அவன் வந்தால்????

சமையலறையில் அவள் , காப்பி போட்டு கொண்டு இருக்கும் போது , பின்னாடி மிக நெருக்கமாக ரகு .

நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க . எனக்கு எல்லாம் தெரியும் , உன்னை அவன் ரொம்ப கொடுமை படுத்துறான் இல்லை .

இப்படி பேசிக் கொண்டே அவளை அணைக்க முயல

நாயே , தள்ளி போடா , இல்லை இங்க நடக்கிறதே வேற .. என்று கண்கள் சிவக்க அவள் கர்ஜித்தாள் .

ரகு வோ , மிக மெல்லிய புன்னகை யுடன் , கிண்டலாக  .

இப்ப உன்னால்  என்ன பண்ண முடியும் ?. உன் புருஷன் தான் என்னை இங்க அனுப்பி நீ எப்படி நடந்துகிறன்னு வேவு பார்க்க சொன்னான் .நான் மட்டும் அவன் கிட்ட போயி ,
உன் பொண்டாட்டி நல்லவள் இல்லை .அப்படி இப்படி சொன்னால் என்னவாகும் ?

பித்து பித்து பிடித்தவள் போல் அவள் முகம் வெளிறிப் போயி இருந்த்தது .

இரகுவே மீண்டும் ,
 கொஞ்ச நேரம் எனக்கு சந்தோசம் தந்த்தால், நீ நன்றாக வாழாலாம் . என்ன சொல்ற ? உனக்கு வேற வழியில்லை என்று சொல்லி விட்டு அவளை நெருங்கினான் .

நெருப்பில் இடப்பட்ட பஞ்சு போல அவள் மனம் எரிந்து கொண்டு இருந்ததது .

ரகு இப்போது மிக நெருக்கமாக ,

இன்னும் நெருக்கமாக

இன்னும் ..

திடிரென அங்கு டிரைவர் வர, ரகு பயந்து நெளிந்து வெளியேறினான் .
பைத்தியம் பிடித்தவள் போல் அவள் அங்கு வெறித்து பர்ர்த்து கொண்டிருந்தாள் .

என்னமா நடந்ததது . யாரும்மா அவன் .. சொல்லு தாயி , என்ன நடந்ததது ?

கொட்டி தீர்த்தாள் . அமைதி அங்கு சிறிது நேரம் உயிர் வாழ்ந்த்தது .

பின் , அவர் விடும்மா , எல்லாத்தையும் விடும்மா .
என் கூட வாம்மா , தாயி ,  இனி நீ என் மகள்   .
அவள் கண்களில் முதல் முதாலாக அனந்த கண்ணீர் .

அடுத்த நாள் தினமலரில்

22 வயது பெண் 55  வயது வாலிபருடன் தப்பி ஓட்டம் 


1/20/2010

தேசத் துரோகிகள்

 நாம் 1947, ஆகஸ்டு மாதம் 15 ஆம் நாள் விடுதலை பெற்றதாக வரலாற்று புத்தகங்களில் படித்து இருக்கிறோம் .

வயதான பல பெரியவர்கள் ," நான் சுதந்திர போராட்டத்தில் பங்கு எடுத்து கிட்டவன்" என்று பெருமை பொங்க கூறி வருகிறார்கள்
அவர்களும் , இந்த தொலைக் காட்சிகளும்  ,சினிமாவும் சொல்லுவது என்னவென்றால் 
வெள்ளையர்கள் கொடூரமானவர்கள் ,
நம்மை    அடித்தார்கள் , பிரித்தார்கள் ,
அதற்கு  சில மன்னர்கள் உதவினார்கள் . 
அது, இது....
இன்னும்   பிற ....

சில எட்டபன்களை மட்டுமே சினிமா காட்டியது .
நாம் மட்டும் அல்லாமல் , பலரும் கொண்ட மாயை இதுதான்
  • மக்கள் எல்லாரும் சுதந்திர வேட்கை கொண்டு பயங்கரமாக வீறு கொண்டு போராடினார்கள் .
  • வெள்ளையர்கள் நம்மை கொன்று குவித்தார்கள் .
  • கடைசியில் ரத்தம் சிந்தி , உயிர் துறந்து சுதந்திரம் வாங்கினோம் .
ஆம் , அவர்கள் சொல்வது எல்லாம் சத்தியமான உண்மை . ஆனால் அவர்கள் வேண்டுமென்றே மறைத்த உண்மைகள் இதை விட கொடூரமானவை .
அதற்க்கு காரணம் , சுய சொரிதலே .
  தப்பு , குற்றம் , பாவம் எல்லாம் வெள்ளையர்கள் மட்டுமே செய்தார்கள் . நாம் எதுவுமே செய்யவில்லை .நாம் ஒரு அப்பாவிகள் . நாம் ஒரு பாதிக்கப்பட்ட பாவிகள் .

உண்மையில் ஆங்கிலேயர்களை விட நெஞ்சில் வஞ்சம் வைத்து பலி வாங்கியது நம் முன்னோர்கள் தான் . என்னடா இவன் உளறுகிறான் என்று நினைப்பது எனக்கு கேட்கிறது .

நாம் இப்போது 100 கோடிகளுக்கு மேல் இருக்கிறோம் . அப்போது 30 கோடிகளுக்கு மேல் இருந்தோம் . அப்படி ஒரு பெருந்திரளாக இருந்த நம்மை , வெறும் ஒரு சில லட்சங்களில் வந்த ஆங்கிலேயர்கள் எப்படி ஆட்சி செய்ய  முடியும் ?

நம் கைகள் தான் நம் கண்களை குருடாக்கியது . ஜாலியன் வாலாபாக் படுகொலையில் முன்னின்று நடத்தியது ஜெனெரல் டயர் என்னும் வெறியன் என்றால் , அவன் கட்டளைக்கு அடிபணிந்து நம் மக்களை சுட்டு கொன்றது யார் ? முதாலாளி விசுவாசம் , தன் தேசப்பற்றை , தன்  சகோதர  , சகோதரிகளை கொன்று குவித்து உள்ளது .

ஊருக்கு , ஊர்  காவல் நிலையங்கள் இருந்தாதாம் . அங்கே பணி புரிந்த்தது யார் ? நம்மவர்கள் தானே .
நமக்கு தெரிந்தது "கொடி காத்த குமரனின் "    சாவு மட்டும் தான் .அச்சில் ஏறாமால் செத்த குமரன்கள் எத்தனையோ ?

அந்த தேச துரோகிகளுக்கு , நாம் விடுதலை அடைந்தவுடன் கொடுத்த தண்டனை என்ன ?

காசுக்கும் , பதவிக்கும் ஆசை பட்டு தானே ஆங்கிலம் , வெளி நாட்டில் "பாரிஸ்டர் " பட்டம் எல்லாம் நம்மவர்கள்  படித்தார்கள் . ஆங்கிலேயர்களை பாதுகாக்க  தானே அவர்களின் படையில் சேர்ந்தார்கள் . நான் சொல்ல வருவது எல்லாம் மன்னர் கால நிகழ்ச்சிகள் அல்ல . அவர்களை அடக்கி ,நம்மை 200 ஆண்டுகள் ஆண்டபோது நடந்த நிகழ்ச்சிகள் .

நம் தாத்தாக்கள் எல்லாரும் நல்லவர்கள் மட்டும் அல்ல .
எனக்கு வரலாற்றில் புரியாத ஒன்று, நாம் யாரிடம் இருந்து விடுதலை பெற்றோம் ?1/18/2010

பேசா மொழி


நான் பொங்கல் விடுமுறைக்காக ஊருக்கு செல்வதற்கு , பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தேன் .
 தேவதைகள் பலர் , அவர்களின் தேவர்களோடு காட்சி கொடுத்ததால் மனம் வெதும்பி சற்று வெறித்த பார்வையுடன் செல் பேசியை நோண்டி கொண்டு இருந்தேன் .

அப்போது ஒரு குட்டி ,அழகிய   பிசாசு வந்து என்னை முறைத்தது . அந்த பாப்பாவுக்கு 2 வயதுக்குள்தான் இருக்க வேண்டும் . ரோஸ் நிறத்தில் ஒரு குல்லா. வெளிர் மஞ்சள் நிறத்தில் டாப்ஸ் .

 நடக்க கூட தெரியவில்லை ,ஆனால் "இது என் ஏரியா"   என்ற பார்வை அதன் கண்களில்  .
எனக்கு அந்த பாப்பாவை கொஞ்சம் வேண்டும் ஒரே ஆசை . எங்க , நமக்கு ஆசைப்பட்டது எல்லாம் நடந்து இருக்கு .

என்னை , மேலும்  கீழும் ஒரு பார்வை .
அப்புறம் கிட்ட கூட வரவில்லை .

ரொம்ப வேகமாக ஓடுவதும் , விளையாடுவதும் ஒரே கொண்டாட்டம் தான் .

கொஞ்ச நேரத்தில் , இன்னொரு  குட்டி பிசாசு வருகை தந்தது .

அக்னி நட்சத்திரம் கார்த்திக் , பிரபு மாதிரி ஒரு முறைப்பு ரெண்டு பேரிடம் .

ஒரு பாப்பா வேகமாக ஓடியது . அதை விட வேகமாக இன்னொன்று ஓடியது.
திடிரென , ரெண்டும் கொஞ்சம் பக்கத்தில் வந்து , அவரவர் சட்டையை பிடித்து கண்காளாலே பேசிக்கொண்டனர் .

என்னடா , இப்படி ஒரு திடீர் திருப்பம் என்று நான் நினைத்துக் கொண்டு இருக்கும் பொது ,
ஒரு பாப்பா , வேகமாக ஓடி, ஒரு இடத்தில் நின்று  இன்னொன்றை பார்த்து சிரிக்கும் .
இன்னொரு பாப்பா , அதை துரத்தி சென்று அதன் அருகில் நின்று ,அதனை தொட்டு பயங்கரமாக சிரிக்கும் .

ரெண்டுக்கும் கொஞ்சம் கூட பேசத்தெரியாது , ஆனால் ரொம்ப நேரமாக சிரிப்பதும் , விளையாடுவதும் ஒரே அக்கப் போர் .

திடிரென ஒரு வில்லன் என்ட்ரி அங்கே .
வில்லனுக்கு உயிர் இல்லை . ஆம் , ஒரு தண்ணீர் பாட்டில் தான் அங்கு வில்லன் .

ஒரு பாப்பா அந்த பாட்டிலை எடுத்தது . இன்னொரு பாப்பா , அதைக் கேட்டது .
ஒப்பந்தம் தோல்வியில் முடிய , இரண்டுக்கும் ஒரே போர் .

சட்டையை இழுப்பதும் , பாட்டிலை இழுப்பதும் ஒரே ரத்தக் கலரி .
அதன் பிஞ்சுக் கால்கள் ,ஓடி ஓடி  களைப்படைந்து  போய் இருப்பதால் ஒரே இடத்திலே நின்று மூன்றாம் உலகப் போர் நடந்து கொண்டு இருந்தது .

ஒரு பாப்பாவுக்கு வெற்றி , இன்னொன்றுக்கு தோல்வி .
நட்பினில் ஒரு விரிசல் .
சிறிது நேரத்திற்கு பின் , ரெண்டு குட்டிகளும் தனி தனியே   நின்று கொண்டு இருந்ததன .

ஒன்று அந்த பாட்டிலுடனும், இன்னொன்று அங்கே , இங்கே ஓடியும் மீண்டும் விளையாட துவங்கின .

திடிரென அந்த தோல்வியுற்ற பாப்பா கீழே விழ , அதன் அப்பா , தூக்கி கொஞ்ச ஆரம்பித்தார் . வலியால் அந்த குட்டி வாண்டு அழ ஆரம்பித்தது .

இப்பத்தான் நீங்க , இங்க கவனிக்கணும் .

இன்னொரு பாப்பா , அந்த பாப்பாவை  கிட்ட போய் பார்க்குது .
அங்கே அழுகை நின்றது .

சில பார்வைகளுக்கு பிறகு , அழுமூஞ்சி பாப்பா , இன்னொரு பாப்பாவை துரத்த ஆரம்பித்தது .மீண்டும் சிரிப்பு சத்தம் .

மீண்டும் அநாதை  ஆனது அந்த தண்ணீர் பாட்டில் .

ஏனோ தெரியவில்லை , என் கைகள் தேடத் துவங்கி இருந்தன ஒரு நண்பனின் செல் நம்பரை .பேசாதிருக்கும் என் நண்பனை பேச வைக்க போகிறேன் .

சில சமயம் , எந்த மொழிகளுக்கும் தேவை இருப்பதில்லை .


1/11/2010

கவிதையை தொலைத்தவர்கள்

என்னடா , இவன் கவிதை எழுதி மொக்கை போடப் போறான்னு  தப்பா நினைக்காம மேலும் படிப்பவர்களுக்கு என் வாழ்த்துக்கள் .

என்னென்றால் , என்னால்

கவிதை எழுத முடியாது ,

கவிதை எழுத தெரியாது .

நான் சொல்ல வருவது, நாம் எல்லாரும் வாழ்வில் கடந்து வந்த ஒரு நிகழ்ச்சிதான் .அதாவது, நாம் ஒரு பாடலை நினைவில் கொண்டு வர முடியவில்லை என்றால் ,நண்பர்களிடம்

டேய் , ஒரு படத்துல , விஜயகாந்த் ,ரேவதி எல்லாரும் நடிச்சி இருப்பாங்களே ..


அதுல கூட , விஜயகாந்த் கடைசில செத்துடுவாறே ..


ரேவதி கூட விதவை ..


டேய் , அந்த படத்துல முதல் பாடல் என்னடா ?

எப்படி கேட்டாலும் , சில சமயம் நமக்கோ , நண்பர்களுக்கோ ஞாபகம் வாராது . வரவே வராது .

ஆனால் முக்கியாமான மீடிங்குல நாம் உட்கார்ந்து இருக்கும் போதோ , சாப்பிடும் போதே , பின்னாடி புரனியில யாரோ தட்டி சொன்ன மாதிரி அந்த பாடல்

"இன்றைக்கு  என்  இந்த  ஆனந்தம் " என்றும் 


அந்த   படம்  "வைதேகி காத்திருந்தாள்"     என்று 

ஞாபகம் வரும் .

 இது எப்படி என்று நாம் யோசிப்பது இல்லை . அது நமக்கு தேவையும் இல்லை .

நான் சொல்ல வருவது , அப்படி கூட எனக்கு கீழே உள்ள சில கவிதைகளை ,சில மொக்கைகளை யார் சொன்னது என்று தெரியவில்லை .

விலாசம் இல்லாத கடிதங்கள் போல என் மனதில் இருந்த சிலவற்றை உங்களிடம் சொல்லி விலாசம் தேட முயற்ச்சிக்கிறேன் . கொஞ்சம் உதவி பண்ணுங்கப்பா ..


---------------------------------------------------------------------

போரால்
பத்து புலிகள்
இறக்கிறார்கள்
நூறு புலிகள்
பிறக்கிறார்கள்

---------------------------------------------------------------------

ஆங்கிலப்பள்ளியில்
அடி வாங்கிய குழந்தை
அழுதது
"அம்மா" என்று

---------------------------------------------------------------------

வாழ்ந்து என்ன செய்யபோகிறோம்
செத்து தொலையலாம்
செத்து என்ன செய்யபோகிறோம்
வாழ்ந்து  தொலையலாம்

---------------------------------------------------------------------

என்னிடம் நீ
பேசியதை விட
எனக்காக நீ
பேசியதில்தான்
உணர்ந்தேன் நமக்கான
காதலை .

---------------------------------------------------------------------

நாம் வாழ்ந்தது சம்பவமாக இருந்தாலும் , செத்தது சரித்தரமாக  இருக்கணும்

---------------------------------------------------------------------

நீ அடித்தது
வலிக்கவில்லை
நீதான் அடித்தாய்
 என்று நினைக்கும் போது
வலிக்கிறது.

---------------------------------------------------------------------


1/08/2010

சிரிக்கும் மிருகம் பெண்

சிரிக்கும் மிருகம் பெண்  என்று அந்த ஆட்டோவின் பின் புறம் எழுதி இருந்தது .

வீட்டுக்கு போகும் என் அவசரம் கூட கொஞ்சம் அமைதியானது அதை பார்த்து .

அந்த ஆட்டோவில் தான்  ஏறினேன் .
நமக்கு தான் வாயை அடக்கி பழக்கம் இல்லையே .
மெதுவாக அந்த டிரைவரிடம் .

அண்ணே , பின்னாடி எதோ புதுசா எழுதி இருக்கீங்க போல .

சாரு, அது இன்னானா , சிரிக்கும் மிருகம் பெண் என்று  சொல்லிவிட்டு ,
பின் ஒரு பெரிய சிரிப்பு  .

அப்ப, அழும் மிருகம் ஆண் . கரெக்டா ?

என்ன சாரு , விளையாடுறீங்களா . ஒன்னையும் எவளாவது லவ்வு பன்னின்னு , அப்பலக்கா கலட்டி விட்டுட்டா தெரியும் .

என்ன பாஸ் , நடந்தது ?

ஊட்டுல சொன்னத நம்பி , அவங்களுக்கு பயந்து என்னை கலட்டி விட்டுட்டா அந்த தே...

எம்புட்டு கோவம் . கொஞ்சம் அமைதியாக இருந்தேன் .

அவரே பின் ,

என்ன சாரு சொல்றீங்க , நான் சொன்னது சரியா ?

உன்னோட பொண்ணு , உன் பேச்சை கேட்டுட்டு அவ காதலை தியாகம் பண்ணினா அவளை அப்படித்தான் கூப்பிடுவாயா ?

ஆட்டோவின் வேகம் குறைந்த்தது . அதன் பின்னர் எங்களுக்குள் இடையே இருந்த்தது அமைதி மட்டும்தான் .

காதலின் மீது மட்டும் இல்லாமல் , காதலை தியாகம் பண்ணுபவர்கள் மீதும் என் பார்வை நிறைய மாறி இருக்கிறது .

நான் ஒன்றும் ரகுவரன் மாதிரி "I KNOW, I KNOW" என்று கத்தும் சைக்கோ இல்லை .
நானும் பல ஆண் ஆதிக்கவாதிகளின்  இன்னொரு ஜெராக்ஸ் போலத்தான் இருந்தேன் இந்த பதிவுலகத்துக்கு நுழையும் வரை .

என்னை ,யாரவது ஒரு பெண் ஸ்கூட்டியில் சாலையில் வேகமாக சென்றால்  ,என்ன கோபம் வரும் என்று உங்களுக்கு தெரியாது .ஆனால் இப்போது எந்த சஞ்சலமும் வருவதில்லை . இப்போது சில சமயம் அவர்களை பார்த்து வியக்கிறேன் .
அவர்களின் வேகம் அப்படி .

 பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் எனக்கு சொல்லிகொடுக்கபட்டதாக நானாகவே ஒரு மாயை வளர்த்து இருந்தேன் .

பதிவுலகம் , பெண்கள் மீது நான் கொண்ட பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக
 நொறுக்கியது .எனக்கு தெரியாமலேயே .

இங்குத்தான் பெண்களின் பார்வையில் அவர்களை நான்  காண முடிந்தது .

நைட்டி உடை பெண்களுக்கு நன்றாக இல்லை என்று ஒரு பதிவர் கூறி இருந்தார் . அதற்க்கு அவர்க்கு வந்த கண்டனங்களை நான் படித்த போது, என் பார்வை எப்போதும் ஒரு ஆணின் பார்வையிலே இருந்துள்ளது என்று தெரிகிறது .

ரத்தம் பந்தம் தவிர வேறு யாரையும் அக்கா என்று  நான் அழைத்ததில்லை . ஆனால் இங்கு முகம் தெரியாமலே பெண் பதிவர்கள் ,பலரை சகோதர  முகம்  கொண்டு அழைப்பது முதலில் எனக்கு ஆச்சரியம் தந்தது .


எழுதுவதில் மட்டும் இல்லாமல் , மற்ற பதிவர்களுடன் உறவை மிக மதிக்கும் வகையில் உருவாக்கி இருப்பது சுலபமான காரியம் இல்லை . இங்கே பெண்கள் அதை மிக இலகுவாக கையாளுகிறார்கள் .

"தான்  ஒரு ஆணாதிக்கவாதிதான்"  என்று யாரும் துணிந்து  கூறிவிட முடியாத அளவுக்கு ஒரு பிம்பத்தை, ஒரு கட்டமைப்பை பெண்கள் மட்டும் இல்லாமல் சில பெண்ணுரிமை பேணி காணும் ஆண் பதிவர்களும் உருவாகியுள்ளார்கள் .நான் ஒரு புரட்ச்சிவாதி அல்ல . என்னை புரட்டி போட்ட இந்த பதிவுலகுத்துக்கு சில நன்றிகளை நவில இந்த பதிவை பயன்படுத்திக் கொள்கிறேன் .


அந்த ஆட்டோ வாசகம் தான் என்னை , நானே திரும்பி பார்க்க வைத்தது .
என்னுள் இருக்கும் ஆணை மட்டும் வைத்துக் கொண்டு ,
 அவனின் ஆதிக்கத்திலிருந்து மெதுவாக வெளிவர
கேள்விக் கேட்டுக் கொண்டே  இருக்கிறேன் .
அவனிடம் பதில் தீரும் வரை .


திடிரென்று எதுவும் நடப்பதில்லை  மாற்றமும் , புரட்சியும் .
இது எல்லாருக்கும்  பொருந்தும் .


1/01/2010

புத்தாண்டு 2010 - உண்மையா ?

இந்த பதிவை படித்தவுடன் , என்டா , இதைப் போய் படித்தோம் என்று கண்டிப்பாக நினைக்க போகிறீர்கள் .

ஜாக்கிரதை .நான் என்னை சொல்லி கிட்டேன் .

என்னை , நான் ஒரு முற்போக்குவாதி , பிற்போக்கு வாதி , நடு போக்கு வாதி   என்று சொல்லிக்கொள்ள மாட்டேன் .இருந்தாலும் இந்த புத்தாண்டை பற்றிய சில ஐயப்பாடுகள் எனக்குள்ளன .

2010 இது எதைக் குறிக்கிறது? . இயசு பிறந்து 2010ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதைத்தான் . ஆனால் அறிவியல், அப்படி ஒருத்தர் , இருந்தாரா இல்லை அந்த ஆண்டுத்தான் , அந்த கிழமைத்தான் பிறந்தாரா என்பதை இன்னும் அறிவிக்கவில்லை .பின் எப்படி அதை உண்மை எனவோ , அதன் அடிப்படையில் அமைந்த இந்த தினத்தை புத்தாண்டு என்று கொண்டாடுவது ?

 இயசு பிறப்பதற்கு முன் (அப்படித்தான் எல்லோரும் சொல்கிறார்கள் ) 10 மாதங்கள் தான் இருந்தன . ஒவ்வொரு அரசனின் ஆட்சியிலும் சில நாட்கள் , மாதங்கள் கூட்டப்பட்டன .

நீங்கள் கேட்கலாம், தமிழ் புத்தாண்டு என்று கூட உள்ளது என்று ?
தமிழில் 12 மாதங்கள் மட்டுமே உண்மை . அதன் வரிசை மட்டுமே நாம் அறிந்தது . ஆனால் அதன் முதன் மற்றும் கடைசி மாதத்தின் அடையாளம் நமக்கு தெரியாது .வட்டத்தின் ஆரம்பத்தை எந்த புள்ளி என்று சொல்வது  ?

தமிழ் வருடங்கள் 60 என்கிறார்கள் . அதில் ஒன்று கூட தூய தமிழில் இல்லை . அது இந்து மதத்தின் திணிப்பு . 

நமது தமிழ் இலக்கியத்தில் எல்லாம் புத்தாண்டு என்றோ , புத்தாண்டு கொண்டாட்டம் என்றோ எந்த செய்தியும் இல்லை . அப்படி இருந்திரந்தால் தை 1  தமிழ் புத்தாண்டாக மாறி , பின் மீண்டும் சித்திரை 1 ௧ மாறி இருக்காது .

ஆக தமிழர்கள் தமிழ் புத்தாண்டு கொண்டாட வில்லை . அது நாம், மற்ற நாட்டினரை பார்த்து காப்பி அடித்தது (வழக்கம் போல ).

நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகையின் பின்னும் ஒரு காரணம் இருக்கிறது . அது அறிவியலுக்கு , அறிவுக்கு ஒவ்வாதது என்றாலும் ஒரு காரணம் உள்ளது . அது உழைப்பாக(பொங்கல்  ) , இறப்பாக(தீபாவளி ) , பிறப்பாக (கிறிஸ்மஸ் ) என ஒன்றாவது உள்ளது .
ஆனால் இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தில் என்ன உள்ளது .?

இப்படி எல்லாம்  மூளை  யோசித்தாலும் ,  என் மனம் வேறு ஒன்றை சொல்கிறது ? மூளை ஏன் கொண்டாடுகிறாய் என்று கேட்கிறது . மனம் ஏன் கொண்டாடகூடாது என்று கேட்கிறது .

வாழ்வில் இந்த மாதிரி சில கொண்டடட்டங்கள் தான் ஒரு பிடிப்பை ஏற்படத்துகின்றன . இதை கொண்டாடவில்லை என்றால் என்ன ஆகிவிடும் ?
ஒன்னும் இல்லை . ஆனால் கொஞ்சம் கொண்டாடினால் , எதோ மனதில் ஒரு தன்னிறைவு , ஒரு புத்துணர்ச்சி .

நாம் தினமும்  கவலை பட  ஆயிரம் காரணங்கள் . நாம் கொண்டாட சில தினங்களே நமக்கு உள்ளது .

மதத்தை , மொழியை , இனத்தை ,தேசத்தை கடந்து இந்த புத்தாண்டை கொண்டாடுவோம் ..இனிவரும் நாட்கள் இனிமையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன் ..

என்ன சொல்ல வரேன் என்றால் ..

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் .

டிஸ்கி : இந்த புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு எனக்கு யாரும் டீரீட் வைக்க வில்லை என்ற கோவத்தில் எழுதியது .. மூளைக்கு வேலை கொடுக்காதீங்க .அது எந்த வேலையையும் நம்மள பண்ண விடாது .