மந்திர ஆசைகள்

2/25/2010

பதின்மம்

என்னையும் தொடர்  பதிவு எழுத சொல்லி மேலும் பாவம் சேர்க்கும் மீன்துள்ளியானுக்கு என்னுடைய ஆழ்ந்த அனுதாபங்கள் . சரி இப்படி சொல்லி தப்பிக்க முடியாது என்று தெரியும் . ஆனால் என்ன எழுதுவது ?  என் பதின்ம வயது அனுபவத்தை  தெரிந்துக் கொள்ள வேண்டியது உலகின் முக்கிய கடமை ஆதலால்  தொடர்கிறேன் .

சினிமாக்களில் வருவானே கதாநாயகன் ,அவன் நமக்கு முக்கியம் இல்லை அவன் கூட சில அல்லகைகள் கடைசி வரை அல்லகைகலாக இருக்குமே அந்த வகை  நான் . ஆனால் நான் கொஞ்சம் ஸ்பெஷல் . ஹீரோவிற்கு  பாடத்தில் சந்தேகம் வந்தால் மட்டுமே உதவும்  குணசித்திர வேஷம் எனக்கு .

பருவ கிளர்ச்சிகளுக்கு துளியும் இடம் தராமல் வாழ்ந்து வந்த வாழும் சரித்திரம் நான் . நம்புக்கப்பா . ஏனென்றால் எனக்கு சொல்லப்பட்ட , படித்துவுடன் கெடைக்கும் வேலைகள் மூன்று .

டாக்டர் , இஞ்சினியர் , பொட்டலம் போடும் மளிகை கடை தொழிலாளி .

எப்போதெல்லாம் 95% இருந்து 85% என்னுடைய மதிப்பெண் குறைகிறதோ அப்போதெல்லாம் இந்த மூன்றாவது வேலைத்தான் கிடைக்கும்   என்று தினமும் ,தின நொடியும் அர்ச்சிக்கப்பட்டது .  மளிகை கடையில் வேலை பார்பவர்கள் எல்லாரும் 85% வாங்கியவர்கள் போல என்று நான் வருத்தப்பட்டது உண்டு .

பொதுவாக அந்த வயதில் , பாராட்டுக்காக முழு மனதும் அரிக்கும் . என்ன செய்வது ?, ஆசியர்கள் எல்லாரும் 1,2,3 இடங்களில் வரும் மாணவர்களை தான் பாராட்டுவார்கள் . ஆனால் என்னை போன்ற 7,8 வது இடங்களில் வருபவனை இந்த உலகம் தன் புறங்கையால் தள்ளித்தான் விடும் .

ஏதாவது  கூட படிக்கும் பெண்களுடன் ஒரு வார்த்தை  பேசினால் மனசு அப்படி அடித்துக்கொள்ளும் . ஆண்ட்ரோஜென் ,ஈஸ்ட்ரோஜென்  கெமிஸ்ட்ரி என்று அமரர் சுஜாதா சொல்லியவாறு எல்லாம் தாறுமாறாக வேலை செய்தது .

என்ன பிரயோஜனம் , ம்கும் ..முக்கும் . விடுங்க பாஸ் .

இந்த பொண்ணுகளே இப்படித்தான் என்று  புலம்பிவிட்டு  நாட்டமையாக வலம் வந்து கொண்டு இருந்தேன் .

திட்டுகள் மட்டுமே பரிசாக கிடைத்த ஒரு நாளில் , பள்ளி ஆண்டு   விழா . பக்கத்தில் இருக்கும் ஹீரோவிடம் நான் சொன்னேன் ,நானும் +2 வில் பரிசு வாங்குவேன் என்று .

போடா , போ , எந்த படத்துல  இந்த காமெடி , சொல்லவே வில்லை என்று சிரிப்பு . உள்ளுக்குள் நொறுங்கித்தான் போனேன் .

தொடையை தட்டி பேச நான் ஒன்றும் ஹீரோ இல்லையே . கண்ணீரை கண்ணுக்குளே சிறை வைத்தேன் . அது வெளியேறியது +2 வில் நான் கலெக்டரிடம்    தங்க மெடல் வாங்கும் போது தான் . பரிசு என்ற கானல் நீர் முதன் முதலில் என் கையில் விழுந்தது .

பள்ளி கூடத்து  நட்பு என்பது பருவ பெண்ணை பார்ப்பது மாதிரி . எப்போதும் மகிழ்ச்சித்தான் , சிரிப்புதான் . கிளர்ச்சித்தான் . ஆனால் அது பின்னர் நிலைக்க முடியாமல் போவதற்கும் அதுவே காரணமாகிறது . இப்போதும் எங்கு பார்த்தாலும் பேசிக் கொள்கிறோம் ,ஆனால் மனதில் ஒரு மெல்லிய திரையோடு .


கல்லுரி கால வாழ்க்கை குணசித்திர வேசத்தில் இருந்து இன்னொரு முக்கிய கதாபாத்திரமாக  மாற்றியது .ஆனால் இன்னும் ஹீரோவாக முடியவில்லை . அரசியல் , அரசியல் அதை நான் கற்றுக்கொண்டது கல்லூரியில் தான் .

பொதுவாக கல்லூரியில் இரண்டு குருப்புத்தான் . ஒன்னு கடலை போடும் , இன்னொன்று கடலை போடாது .என்னென்றால் எங்களுக்கு தெரியாது , முடியாது .

நான் இரண்டாவது குருப் . ஒரு சின்ன ரவுடியாக வலம் வரும் ஆசை கொஞ்சம் நடந்தேறியது . உலகத்தில் உள்ள ஒட்டுமொத்த கெட்ட வார்த்தைகளையும்  ஒரு சேர நண்பர்களுக்குள் புன்னகையுடன் திட்டிக்கொள்வோம் . அவனை(நண்பனை ) நான் கேவலமா திட்டுவேன் , அவன் என்னை ரொம்ப கேவலமா திட்டுவான் . இதை ஒரு விளையாட்டாகவே நாங்க செய்வோம் . 

சோதனை காலம் என்றால் அது Placement காலம் தான் . என்னுடைய ஆங்கில புலமையை பார்த்து , அருவி என கொட்டும் ஆங்கில அறிவை பார்த்து மிரண்டு எனக்கு ஒரு நிறுவனமும் வேலை தரவில்லை . இந்த தமிழ் மீடியம் படித்து வருத்தப்பட்டது அப்போதுதான் . மெதுவாக ,என் தன்னம்பிக்கை குறைய தொடங்கியது . முதல் 3 நிறுவனங்களில் நண்பர்கள் எல்லாருக்கும் வேலை கிடைத்துவிட    நான் மட்டும் தனி மரமானேன் .  வாழ்க்கையை பார்த்து பயம் பழக தொடங்கினேன் . தொடர் முயற்சிகள் என்னை அயர்ச்சி அடைய மட்டுமே செய்தன . தீண்டாமையை எனக்குள்ளே நானே உருவாக்கி கொண்டேன் . ஒரு நாள் , அந்த நாள் மீண்டும் முயற்சி செய்து தோல்வியை சந்தித்தேன் .


அறையில் தனியே ,என் தலையணை மெதுவாக கண்ணீரால் நனைந்து கொண்டு இருந்த்தது . வாய் விட்டு அழ முடிய வில்லை  .

நண்பன் ஒருவன் வந்தான் . கண்ணை    மூடிய நிலையில் நான் .

"டேய் , நீ அழ வேண்டாம் என்று சொல்ல மாட்டேன் . நல்ல அழு . அழு .ஆனால் இது தான் நீ கடைசியா அழுவது என்று முடிவெடுத்து விட்டு அழு . "

கண்ணை திறந்து பார்த்தேன் . எதுவும் பேச வில்லை . அது தான் நான் கடைசியாக் அழுதது . அடுத்த சில நாட்களில் ,என் கைகளில் வேலை .

இன்றும் சோதனை வரும் போது ,அந்த வார்த்தைகளை நினைத்துக் கொள்வேன் .கல்லுரி கால நட்பு எனக்கு ஒரு வரபிரசாதம் ."மாப்ள , 20,000 அக்கௌண்டுக்கு  அனுப்பிடு " , என்று சொன்னால் அடுத்த 5 வது நிமிடம் பணம் வந்து விடும் . இப்படி ஒரு நம்பிக்கையை என்னை பற்றி மற்றவர்களிடம் ஏற்படுத்தியது கல்லுரி . ஆரம்பிக்க தெரிந்த எனக்கு முடிக்க தெரியவில்லை . முடிவில்லா வானம் போல் ,நட்பும் தொடரட்டும் .

என்னை வம்புக்கு இழுத்த மாதிரி , நானும் இரண்டு பேரை கூவிக் கொள்கிறேன் .
புவன் (சுட்டப்பழம் )
குந்தவை
மேற்ப்படி பெரிய எழுத்தாளர்கள் ,நான் சொன்ன படி "பதின்மம் " பற்றி தொடர் பதிவு எழுத வில்லை என்றால் , கடுமையான் பின் விளைவுகள் வரும் என்று இப்போதே கெஞ்சி கேட்டுக்கொள்கிறேன் .


2/22/2010

ரஜினி -ஒரு மனுசன்டா ...

ரஜினி , அஜித் ரசிகர்கள் வேறு தளத்திற்கு சென்று விடவும் . உங்களுக்கு புரியாத , தெரியாத செய்திகளை நான் இங்கு சொல்ல வில்லை .மற்றவர்கள் வழக்கம் போல வேறு எங்கும் போகாமல் மேலே படிங்க .

திரும்பவும் ரஜினி சீசன் . இப்போது சீண்டி இருப்பது ஜாகுவார் தங்கம் , குகநாதன் போன்ற பழம் பெரும் மேதைகள் .ரஜினி யை ஜோக்கர் என்றும் , அஜித்தை மிக கேவலமாகவும் திட்டி  உள்ளனர் . அவர்கள் இதை ஏன் சொல்கிறார்கள் ?

இதை வைத்து ஒன்று,  அரசிடம்  ஏதாவது வேலை ஆக வேண்டும் ,அப்படி இல்லை என்றால்  கேவலமான புகழ் பெற வேண்டும் .ஆனால் இதை தாண்டி ஒரு அரசியல் இதில் உள்ளது . அது என்ன ? சொல்கிறேன் பின்னர் .

ரஜினி , அஜித் வேண்டாம் என்றால் விழாக்களுக்கு அவர்களை கூப்பிடாமல் தானே இருக்க வேண்டும் . எந்த போராட்டம் என்றாலும் ரஜினி வேண்டும் , அந்த புகழில் இவர்கள்  குளிர் காய வேண்டும் .

பொதுவாக ரஜினி பற்றி பல எதிர் மறை கருத்துகள் உள்ளன .அதில் சில வற்றில் நான் உடன் படுவேன் .ஆனால் எல்லாவற்றுக்கும் இல்லை .

காவேரி பிரச்சனை என்றால் , தமிழ் நாட்டில் ரஜினியை கன்னடக்காரன் என்பார்கள் . அவர் ஏதாவது போராட்டத்தில் பங்கு எடுத்த்விட்டால் ,இவன் தமிழ் நாட்டுக்காரன் என்று கர்நாடகத்தில்  சொல்லுவர் . இல்லை என்றால் ரஜினி ஒரு மராட்டிக்காரன் என்று தூற்றுவர் .

இதற்க்கு எல்லாம் என்ன காரணம் தெரியுமா ? நம்முடைய கீழான புத்திதான் . நமக்கு ஒரு நல்லது நடக்க வேண்டும் என்றால் ரஜினியை உயர்த்தி பிடிப்போம் . இல்லை என்றால் மிதிப்போம் .  வேறு எந்த மாநிலத்திற்கு நாம் சென்றாலும் , நாம் பெருமை பட ஒரு நிகழ்வாவது ரஜினியால் நடந்து விடுதிகிறது . அமிதாப் Vs ரஜினி என்று சொல்லும் போது , ரஜினி எங்க ஆளு என்று நாம் சொல்கிறோம் .

பல வெளி நாடுகளில் ரஜினியால்தான் , தமிழ் படங்களுக்கு சிறிது வெளிச்சம் உண்டானது என்பதை திரைத்துறையினர் மறைக்க முடியாது .

விடுதலை போராட்டத்தில் முதலில் கிளர்ந்து எழுந்தவன் தமிழன் , அவன் பெயர் கட்டபொம்மன் என்று மாரு தட்டுகிறோம் . ஆனால்  கட்டபொம்மனோ தெலுங்கு மொழி வாழ் வந்தவன் என்பது வரலாறை படிப்பவர்களுக்கு தெரியும் . நமக்கு தெரிந்தாலும் , இல்லை அவன் தமிழ் நாட்டில் பிறந்தான் , வளர்ந்தான் , தமிழ் நாட்டிற்க்காக உழைத்தான் என்று சொல்லி பெருமையை தக்க வைக்க மட்டுமே பார்க்கிறோம் .இங்கே அவன் நதி மூலம் , ரிஷி மூலம் தேவை இல்லை . நமக்காக உழைத்தானா என்று கேள்விக்கேட்டு அவனை நாம் தமிழனாக ஏற்றுக்கொண்டோம் .

இன்று திராவிடர்கள்  என்று பழம் பெருமை பேசும் நாம் , உ.வெ.சா   என்ற ஒரு ஆரிய ஐயர் இல்லை என்றால் தமிழில் பல இலக்கியங்கள் இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கும் . அதானால் அவரை தமிழ் தாத்தா என்று கூப்பிட்டு மகிழ்கிறோம் .

இப்படி உற்று நோக்கினால் ,தேவை படும் போது மட்டும் சிலரை உயர்த்தி , தேவை இல்லாத நேரத்தில் கொஞ்சம் கூட யோசிக்காமல் கிழே போட்டு விடுவோம் .

ரஜினியை ஒரு பெரிய புனிதனாக நான் நினைக்க வில்லை . ஆனால் ஒரு நல்ல மனிதன் அவர்க்குள்ளாக எப்போதும் நிறம் மாறாமல் இருக்கிறான் .
ரஜினியின்   பேச்சுகளில் உண்மை மிக எளிமையாக இருக்கும் . மேடை மிகை பேச்சு அவர் பேச்சுகளில் இருக்காது . எதுகை மோனை இருக்காது .மனதில் தோன்றியதை சொல்லிவிடுவது  அவர் இயல்பாக இருக்கிறது .

ஆனால் அதற்காக   யாருக்காவது ஏதேனும் துன்பம் என்றால் தன் புகழை ,மரியாதை குறைத்து கீழ் இறங்கி வருவதும் வாடிக்கை . ரஜினியால் கெட்டவர்கள் எவரும் இல்லை என்பது அவர்களின் எதிரிகளுக்கும் தெரியும் .
இதை போன்று அஜித் இப்போது பேசி வருவதும் ,அவருக்குள்ளும் ஒரு நல்ல மனிதன் இருக்கிறான் என்பதை காட்டுகிறது .

சரி , ரஜினியை , அஜித்தை திட்டுபவர்கள் பின்னால் ஒரு அரசியல் என்று சொன்னேன் இல்லையா ? அதாவது ரஜினி ,கமல் , அஜித் ,விஜய் போன்ற பெரிய தலைகளின் வருகையை வைத்துதான் பெரிய மக்கள் கூட்டத்தை அவர்கள் கூட்டுகிறார்கள் . டிக்கெட் எல்லாம் கொடுத்து பெரிய விலை பார்கிறார்கள் . பெரிய நிறுவனங்களிடம் இந்த கூட்டத்தை காண்பித்து விளம்பரம் மூலம்  பெரிய நிதி அன்பளிப்பு பெறுகிறார்கள் .பின் அந்த நிகழ்ச்சியை ஒரு தொலைக்காட்ச்சிக்கு அதை விற்று மேலும் ஒரு பெரும் பணம் பார்கிறார்கள் .  இப்படி எல்லாம் பணம் வரும் வழியை ரஜினி ,அஜித் அடைத்தால் என்ன செய்வது ?

இங்கே கருப்பு பணம் புகுந்து விளையாடுகிறது . புகழ் கிடைகிறது . அரசியல்  வாதிகளின் பழக்கம் , அதன் மூலம் வரும் வருவாய் ..எல்லா வற்றையும்  திடீர் என அவர்கள் இழக்க முடியவில்லை .அதான் இப்படி கத்திக் கொண்டு இருக்கிறார்கள் .


2/15/2010

நான் ஏன் காதலிக்க கூடாது ?

எல்லாரும் ஏன் காதலிக்கிறார்கள்  என்று என் ஒரு பக்க மூளை கேட்டது ?

இன்னொரு புறம் , நான் என் காதலிக்க கூடாது ?  என்று  கேள்வி வந்து விழுந்தது .

Homely பொண்ணுங்களை காதலிக்கலாமா இல்லை,  மாடர்ன் பொண்ணுங்களை காதலிக்கலாமா  என்று  அடுத்த கேள்வி .

ஹோமேலி பொண்ணுங்களை காதலிக்கலாம் என்றால் மாடர்ன் பொண்ணுங்க நல்லவங்க இல்லையா என்று இன்னொரு கேள்வி .

ரெண்டும்  சேர்ந்து  ஒரு பொண்ணை பார்த்து காதலிக்கலாம் என்றால் , அவளை எங்கு பார்ப்பது என்று கேள்வி .

கோவில் என்றால் ஒரே homely , pub என்றால் ஒரே மாடர்ன் . ரெண்டும்  சேர்ந்த ஒரு பொண்ணை ஆபீஸ்ல காதலிக்கலாம் என்றால்
வேறு  யாரையாவது அவள் காதல் செய்கிறாளா என்று திடீர் கேள்வி .

காதலை சொன்னப்பின் என் காதலை ஒத்துக் கொள்வாளா என்று அடுத்தக் கேள்வி .

ஒத்துகொண்டப்பின் பின் காதல் ,கல்யாணத்தில் போய் முடியுமா என்று சந்தேக கேள்வி .

கல்யாணம் என்றால் பெற்றோர் சம்மதத்துடன்  இல்ல ஓடிப் போய் கல்யாணமா என்று பயங்கரக் கேள்வி .

கல்யாணம் செய்தப்பின் காதலிக்க முடியுமா என்று  கேவலமான கேள்வி .

பதில் தெரியாததால்  நான் இது வரை காதலிக்க வில்லை .

போதுமா , போதுமா ..

இனிமே எவனாவது , மச்சி அப்புறம் உன் ஆளு என்ன  சொல்றா ?
அப்படின்னு  கேட்டீங்க ...!!!@@#$$$

ஏன்டா  இப்படி , ஒருத்தனை அழ வச்சி பார்ப்பதில்  நம்ம தமிழர்கள் தான் பெஸ்ட் ..

டிஸ்கி : இப்போதைக்கு விஸ்க்கி ,

அப்புறம் உங்களை மீட் பண்றேன் .

அவள் பறந்து போனாளே , என்னை மறந்து போனாளே..


2/11/2010

அரக்க குணம் ,இரக்க மனம்

இயலாமையின் வெளிபாடு கோபம் . அதனை தனிப்பதர்ககாக நான் அடிக்கடி செல்லும் இடம் அண்ணாச்சி டீ கடை .

அந்த கசங்கிய  நாளிதழ்கள் , சுட சுட வடை ,அந்த பக்கம் இருக்கிற லேடிஸ் ஹாஸ்டல் இது எல்லாம் தேவைபடுகிறது ஒண்ணுக்கும் உதாவத இந்த கோவத்திற்கு .

அன்றும் மற்றொரு நாளே . வழக்கம் போல  டீ கடை  நோக்கி  என் கோப பயணம் சென்றது .

மிக பரிதாபமாக ஒரு ஜீவன் , இல்லை ,இல்லை ஒரு " நாய்"  ஜீவன் என்னை முறைத்து பார்த்து கொண்டு இருந்தது . நாங்க எல்லாம் யாரு ? அப்படியே முறைச்சிகிட்டே  பின்னாடி நடந்து அண்ணாச்சி கடைகிட்டே வந்து சேர்ந்தேன் .


அப்பவும் அந்த நாய் என்னையே முறைசிகிட்டே இருந்தது . என்னது தொப்புளை சுத்தி 16 ஊசியா ? என் உள் மனம் கேள்வி கேட்க துவங்கியது  .

அப்போது தான், ஒரு 5 அல்லது 6 நாய் குட்டிகள் அதன் அம்மாவை சூழ்ந்து கொண்டன . ஆனால், அந்த   நாய் , அந்த குட்டிகளை தள்ளி விட்டு என்னை நோக்கி மெதுவாக வரத் துவங்கியது .

திடிரென நின்றது . குட்டிகள் பால் குடிக்க துவங்கின . ஆனால், அந்த  நாய் இன்னும் சில நாட்கள் மட்டுமே உயிரோட இருக்கும் என்பது போல ரொம்ப பலவீனமாக இருந்தது .

மீண்டும் அந்த நாய் , என்னை நோக்கி வரத் துவங்கியது . அப்போதுதான் கவனித்தேன் ஒன்றை . அதன் அமுத சுரபியில் இருந்து ரத்தம் வடிந்தது கொண்டு இருந்தது .ஏனோ "ஆயரத்தில்    ஒருவன் " படம் மனதில் வந்து போனது .

நான் ஒரு பன்னை வாங்கி  அதற்க்கு வைத்தேன் , ரொம்ப பசி போல . லபக் லபக் . முடிந்தது எல்லாம் . எனக்கு ஒரு நன்றி  பார்வை பரிசளித்தது .


டீ கடை  அண்ணாச்சிக்கு உடனே ரொம்ப கோபம் ,
" இந்த சனியன்  திரும்பவம் வந்துடுச்சா !!!???..
டேய் அந்த கட்டையை  எடுடா .."
எனக்கு இதயம் மிக வேகமாக துடிக்க துவங்கியது .

சரியாக தூக்கி எறியப்பட்ட அந்த கட்டை அந்த நாயின் தலை மற்றும் அதன் ஒரு குட்டியின் காலையும் பதம் பார்த்தது . கண்டிப்பாக ரத்தம் வந்து இருக்கும் .

அந்த நாய் , அடி வாங்கிய அந்த குட்டியை நக்கி கொண்டே நகர்ந்து சென்றது .
நான் திரும்பிக் கொண்டேன் .

ஈன சுரத்தில் அது கத்திக் கொண்டே நடந்து கொண்டிருந்தது . எதோ ஜென்ம பந்தம் போல , என்னால் டீ குடிக்க முடியவில்லை .

இன்னும் ரெண்டு பன் வாங்கினேன் .  கால்கள் நடக்க துவங்கின அந்த நாயை நோக்கி . மன்னிக்கவும் அந்த தாயை நோக்கி .


2/11/2010

ச்சோ ஸ்வீட் ....